கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்

திங்கள், 25 அக்டோபர், 2021

மையல்

காரிருள் ஆழ்த்தும் கழகத்தில்
மேகங்கள் தூவிய பன்னீரில்
கனப்பொழுதில் காரிகை வந்தாள்...
கருநீலப் பொட்டிட்ட விழிகள்
செந்தாமரைச் சாயல் செவ்விதழ்
மானிடம் மயக்கும் மையல்
மங்கையெனப் படைத்திட்ட மாயவள்...
மாறனின் மலர்க் கணைகளை
வெல்லத் துடித்த யென்னை
வெற்றுப் புன்னகையில் வீழ்த்திட்டாள்....
மெல்லத் தீண்டிய தென்றலால் 
மையல் கொண்டேன் அவளிடம்....
                                நா.மணிகண்டன்.

திங்கள், 12 ஜூலை, 2021

காதல் கிறுக்கல்

நான்முகன் தீட்டிய நல்லோவியம்
புவியில் நடமாடக் கண்டேன்...
வானத்துக் கதிரவன் கதறுகிறான்!
அவளைக்காண விழிகள் போதவில்லையாம்!!
மறுபுறம் வெண்பனி ஆடைபோர்த்த
இந்திரலோக அரம்பையை விஞ்சிய
பேரழகு!!!!!!
அவளைக் கண்டதும் தூரத்தில்
மறைந்து கொண்ட வெண்ணிலவை
மீட்டுவர பரித்தேரேறி புறப்பட்டேன்....
என்னவள் விழிகள் கட்டளையிட்டதால்....
                        -நா.மணிகண்டன்.

செவ்வாய், 14 ஜூலை, 2020

இதுவும் கடந்து போகும்.

நித்திரை கடக்கும் நிசப்தத்தில்
இருளோடு ஒரு உரையாடல்.
கொடுங்காலன் பிடியது விலக
வீட்டிற்குள்ளே பலநாள் சிறைவாசம்.

ஓரறிவுயிரதை அலட்சியம் செய்ததால்
ஆறறிவுயிரது மரணப் படுக்கையில்
தினந்தினம் அதைக் காணுகின்றேன்
எட்டுத்திக்கிலும் கண்ணீரின் கால்தடம்.

காற்றும் கூட ஆலமாக(நஞ்சாக)
கேட்பதெல்லாம் அவல ஓலம்
விண்ணெட்ட வேண்டிய சிறகுகள்
பரந்தவுலகில் பறப்பது எப்போது!

காலம் தந்த காயத்திற்கு
மருந்திட வருபவர் யாரோ!
மனம் தொடுக்கும் கேள்விக்கெல்லாம்
விடை அறிந்தவர் யாரோ!

வேதனையில் இமைமூடி சாய்ந்தேன்
ஆயிரஞ்சூரியர் பிராகசித்த ஒளியில்
மண்மகள் அவளின் பிரவேசம்!
காலம் தந்த காலனுக்கு

நானே மருந்தென்று அன்னை
வாய் மொழிந்து மறைந்தாள்.
துயில் கலைந்து எழுந்தேன்
கனவில் பிறந்தது நம்பிக்கை.
                           -நா.மணிகண்டன்.

சனி, 13 ஜூன், 2020

தாயே வா! மொழியே வா!

அழகான குலமகள்
ஆதியில் பிறந்தவள்
இன்முகம் கொண்டவள்
ஈடில்லாத் தாயவள்
உண்மையின் பெயரிவள்

ஊக்கத்தின் உயிரிவள்
எங்கும் நிறைந்தவள்
ஏழுலகிலும் சிறந்தவள்
ஐம்பெருங் காப்பியங்களிலே
ஒளிரும் தேவதை

ஓலைச்சுவடியிலே பதிந்தாள்
ஔடத மகத்துவமிக்க
எங்கள் கன்னித்தமிழே
முச்சங்கம் வைத்துன்னை
சிங்காரமாய் வளர்த்திட்டோம்.

திருமகளின் திருவுருவே
ஆதியில்ல உமக்கு
அந்தம் ஏதம்மா
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன்
தொலைத்திட்ட உம்மை

ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்தோம்
இதோ இன்று
கீழடி என்ற
மூவடியைத் தோண்ட
மறைத்து வைத்திட்ட

உந்தன் புகழெல்லாம்
அணிவகுத்து வருகுதம்மா
குன்றாப்புகழ் தொல்காப்பியத்திலே
தொள்ளாயிரத்து இருநூறென்று
உன் மழலைப்பருவத்தின்

மங்காத புகழை
உச்சி முகர்ந்தோம்
சிலம்பும் மணிமேகலையும்
உந்தன் புகழ்பாட
சிந்தாமணியுடனே வளையாபதி

குண்டலகேசியிலே உதித்திருந்து
மொழி கொடுத்து
உயிர் கொடுத்த
எங்கள் அன்னையே
நீயிருக்கும் இடந்தேடி

காடு மலைமுகடெல்லாம்
உம்மைத் தேடியலைந்தோம்
தலைமீது மகுடமாய்
நாவிலே நரம்பென
உயிரிலே கலந்திருந்தாய்.

எங்களுக்குள் ஆட்சிபுரிந்து
அரியாசனமீதில் அமர்ந்திருந்தாய்
உம்மீது பித்தாகி
சித்தரெனத் திரிந்து
உம்மைக் கண்டுகொண்டோம்.

நாயகியே நற்றமிழே
கதிரொளித் திலகமிட்டு
காவிரிமேவும் கூந்தலோடு
கொங்குதமிழ்  மங்கையென
காசினி மீது

தாயே வருக
மொழியே வருக
என்றும் மங்காத
சங்கென முழங்கும்
செந்தமிழே வருக.
                     -நா.மணிகண்டன்.

திங்கள், 8 ஜூன், 2020

கள்ளிச்செடியின் போதனை

முள்ளுக்கும் உயிருண்டு
நீரின்றியும் வாழ்வுண்டு
அரணாக ஆயிரமுட்கள்
மத்தியில் மலரும்
மலரென்ற அதிசயம்.

எவ்விடத்திலும் நான்
வேரூன்றி வளர்வேன்
முட்கள் நிறைந்த
தேகத்தின் பலம்
நம்பிக்கையை விதைக்கும்.

உன்னைத் தடுக்க
ஆயிரம் தடைகள்
தடைகளுக்கு அஞ்சினால்
உனது இலக்குகளை-நீ
வெல்வது எப்போது.

அழகிய மலர்கள்
ஆயிரம் பூக்கும்
திசை மாறிவிடாதே
உனது கனவுகளுக்கு
எல்லையென்பது கிடையாது.

மலர்ந்த அன்றே
வீழ்ந்து மடிய
நீயொன்றும் மலரல்ல
என்னைப் போன்றே
நீயும் கள்ளிச்செடி.

முட்கள் என்பது
வேதனையல்ல நம்பிக்கை
உண்மையில் இவ்வுலகில்
சாகாவரம் பெற்றவன்
நானொருவன் மட்டுமே.

இது கவிதையல்ல
நம்பிக்கை நிறைந்த-ஒரு
கள்ளிச்செடியின் போதனை.
இறைவன் படைப்பில்
அனைத்திற்கும் பொருளுண்டு.
                      - நா.மணிகண்டன்.

வெள்ளி, 5 ஜூன், 2020

விழிப்புணர்வு

குழாய் உடைந்து
வீணாக ஓடும்
நீரின்மேல் நடக்கிறது
மக்களின் ஊர்வலம்
தண்ணீரைத் தேடி
                    -நா.மணிகண்டன்.