கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்: ஜூலை 2020

செவ்வாய், 14 ஜூலை, 2020

இதுவும் கடந்து போகும்.

நித்திரை கடக்கும் நிசப்தத்தில்
இருளோடு ஒரு உரையாடல்.
கொடுங்காலன் பிடியது விலக
வீட்டிற்குள்ளே பலநாள் சிறைவாசம்.

ஓரறிவுயிரதை அலட்சியம் செய்ததால்
ஆறறிவுயிரது மரணப் படுக்கையில்
தினந்தினம் அதைக் காணுகின்றேன்
எட்டுத்திக்கிலும் கண்ணீரின் கால்தடம்.

காற்றும் கூட ஆலமாக(நஞ்சாக)
கேட்பதெல்லாம் அவல ஓலம்
விண்ணெட்ட வேண்டிய சிறகுகள்
பரந்தவுலகில் பறப்பது எப்போது!

காலம் தந்த காயத்திற்கு
மருந்திட வருபவர் யாரோ!
மனம் தொடுக்கும் கேள்விக்கெல்லாம்
விடை அறிந்தவர் யாரோ!

வேதனையில் இமைமூடி சாய்ந்தேன்
ஆயிரஞ்சூரியர் பிராகசித்த ஒளியில்
மண்மகள் அவளின் பிரவேசம்!
காலம் தந்த காலனுக்கு

நானே மருந்தென்று அன்னை
வாய் மொழிந்து மறைந்தாள்.
துயில் கலைந்து எழுந்தேன்
கனவில் பிறந்தது நம்பிக்கை.
                           -நா.மணிகண்டன்.