கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்: கள்ளிச்செடியின் போதனை

திங்கள், 8 ஜூன், 2020

கள்ளிச்செடியின் போதனை

முள்ளுக்கும் உயிருண்டு
நீரின்றியும் வாழ்வுண்டு
அரணாக ஆயிரமுட்கள்
மத்தியில் மலரும்
மலரென்ற அதிசயம்.

எவ்விடத்திலும் நான்
வேரூன்றி வளர்வேன்
முட்கள் நிறைந்த
தேகத்தின் பலம்
நம்பிக்கையை விதைக்கும்.

உன்னைத் தடுக்க
ஆயிரம் தடைகள்
தடைகளுக்கு அஞ்சினால்
உனது இலக்குகளை-நீ
வெல்வது எப்போது.

அழகிய மலர்கள்
ஆயிரம் பூக்கும்
திசை மாறிவிடாதே
உனது கனவுகளுக்கு
எல்லையென்பது கிடையாது.

மலர்ந்த அன்றே
வீழ்ந்து மடிய
நீயொன்றும் மலரல்ல
என்னைப் போன்றே
நீயும் கள்ளிச்செடி.

முட்கள் என்பது
வேதனையல்ல நம்பிக்கை
உண்மையில் இவ்வுலகில்
சாகாவரம் பெற்றவன்
நானொருவன் மட்டுமே.

இது கவிதையல்ல
நம்பிக்கை நிறைந்த-ஒரு
கள்ளிச்செடியின் போதனை.
இறைவன் படைப்பில்
அனைத்திற்கும் பொருளுண்டு.
                      - நா.மணிகண்டன்.

2 கருத்துகள்:

  1. அருமையான கவிதை தோழா .... வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  2. கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது
    மேலும் பல கவிதைகளை படைத்த எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு